Simon Bolivar: Liberty and Equality (in Tamil)

சிமோன் பொலீவர் – விடுதலையும் சமத்துவமும்
ந. முத்து மோகன்
லத்தீன் அமெரிக்காவின் முதல் புரட்சியாளர் என்று சிமோன் பொலீவரைச் (1783-1830) சொல்லுவதில் நியாயம் உண்டு. சேகுவாரா, பிஃடல் காஸ்ட்ரோ முதல் இன்றைய ஹியூகோ சாவேஸ் வரையில் பல லத்தீன் அமெரிக்கப் போராளிகள் தமக்கு வழிகாட்டிய முதல் புரட்சியாளர் என்று சிமோன் பொலீவரைத்தான் சொல்லுகிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் இவரது பெயரால் பொலீவியா என்று ஒரு நாடு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஒரு ஜார்ஜ் வாஷிங்டன் போல, பிரான்சு நாட்டுக்கு ஒரு நெப்போலியன் போல லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சிமோன் பொலீவர் ஒரு சக்ரவர்த்தி, ஒரு விடுதலைப் போராளி, ஒரு குதிரை வீரர். முன்கால்கள் இரண்டையும் தூக்கியபடி சீறிப்பாயும் ஒரு குதிரையின் மீது இவர் அமர்ந்திருக்கும் சிலைகளை லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் காணமுடியும். லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒவ்வொரு தேசபக்தனும் சிமோன் பொலீவரிலிருந்துதான் தனது அரசியல் ஈடுபாட்டைத் தொடங்குகிறான்.
சிமோன் பொலீவர் தென் அமெரிக்காவில், இன்று வெனிசுவேலா என்று வழங்கப்படும் நாட்டின் வடபகுதியிலுள்ள கராக்கஸ் என்ற மலைகள் நிறைந்த வட்டாரத்தில் பிறந்தார். இவரது குடும்பம் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கராக்கஸ் பகுதிக்குப் புலம் பெயர்ந்து வந்து இங்கேயே வாழத் தொடங்கியது. இவரது முன்னோர்கள் தாமிரச் சுரங்கங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாய், தந்தை இருவரையுமே சிறு வயதிலேயே இழந்து, அவரது வீட்டு வேலைகளைச் செய்துவந்த இப்போலிட்டா என்ற அடிமைப் பெண்ணாலேயே இவர் வளர்க்கப்பட்டார். “நான் அறிந்த ஒரே தாய் இவர்தான்” என்று பொலீவர் பின்னாட்களில் குறிப்பிடுவார்.
பொலீவரின் ஆசிரியராக இருந்த ரொட்ரீகசைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்கள். ரொட்ரீகஸ், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர். பொலீவருக்கு பிரெஞ்சு சிந்தனையாளர்களின் கருத்துக்களை வெகுவாக ஊட்டியவர் இவர் என்று கருதப்படுகிறார். ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு ரொட்ரீகஸ் நாடுகடத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்ட வேளைகளில் ரொட்ரீகசும் பொலிவரும் (ஆசிரியரும் மாணவரும்) ஒன்றாக அலைந்து திரிந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஜான் லாக், தாமஸ் ஹோப்ஸ், வால்டேர், ரூஸ்ஸோ ஆகியோரைப் பெரும் காதலுடன் பொலீவர் வாசித்தறிந்து அவர்களின் சுதந்திரச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். பிரெஞ்சு நாட்டின் அறிவொளி இயக்கத்தால் அவர் பெரும் தாக்கம் பெற்றார்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் “கம்யூனிஸ்ட் அறிக்கை (1848)” வெளிவருவதற்கு முன்னரே சிமோன் பொலீவரின் வாழ்க்கைக் காலம் முடிந்து விட்டது என்பதைக் காணுகிறோம். சிமோன் பொலீவர் தலைமை தாங்கி நடத்திய எழுச்சிகளெல்லாம் ரஷ்யப் புரட்சிக்கு (1917) சுமார் 100 ஆண்டுகள் முந்தியவை என்பதும் கவனத்திற்குரியது. பொலீவரின் புரட்சிகரச் செயல்பாடுகளை பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலைப் போர் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சொன்னதுபோல, ஜார்ஜ் வாஷிங்டன், நெப்போலியன் போன்ற போர் வீரர்களைப் போலவே தானும் ஆகவேண்டும் என்றே சிமோன் பொலீவரும் விழைந்தார். இதனை வேறுவிதமாகச் சொல்லுவதானால், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற “வளர்ச்சியடைந்த நாடுகளைப்” போல தனது நாடு அமைந்துள்ள லத்தீன் (தென்) அமெரிக்கக் கண்டமும் விடுதலை பெற்று வளர்ச்சி அடையவேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது.
ஐரோப்பிய நாடுகளால் காலனி ஆட்சிக்கு உட்படுத்தப் பட்டிருந்த ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கண்டங்களுக்கிடையில் விடுதலை பெறவேண்டும் என்ற குரலை முதன்முதலாக உரக்க எழுப்பியவர் சிமோன் பொலீவர் ஆவார். தேசிய விடுதலை இயக்கங்கள் எனும் முக்கியமானதோர் அரசியல் நிகழ்வின் வரலாற்றை நாம் எழுதத்தொடங்கினால் அதன் மூத்த தலைவராக சிமோன் பொலீவரைப் பற்றி எழுதவேண்டி வரும். மார்க்சிய மொழியில் சொல்லுவதாக இருந்தால் லத்தீன் அமெரிக்கத் தேசிய பூர்ஷ்வா புரட்சிகளின் தலைவராக இவர் விளங்கினார். 1806 ஆம் ஆண்டிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஊடாக குதிரை வீரராகப் பயணம் செய்து ஸ்பானிய காலனிய ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற செய்தியைப் பரப்பி வந்தவர் பொலீவர். ஆங்காங்கே சிறிய பெரிய எழுச்சிகளில் ஈடுபட்டு ஓய்ந்து போயிருந்த பழைய தலைவர்களையும் இளைஞர்களையும் அவர் திரட்டி ஒன்றுபடுத்தினார். போர்த்திறன் கொண்டவர்களை இனம் கண்டுகொள்வதிலும் அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதிலும் அவர் குறிப்பான ஆற்றல் கொண்டவர் என்று பாராட்டப்படுகிறார். உடனடியாக எளிதில் அவர் வெற்றி பெற்றுவிடவில்லை. தென் அமெரிக்க நாடுகளின் ஊடாக அவர் அலைந்து திரிந்தார். போராளிகளைத் தேடி அலைந்தார். சர்வதேச அளவில் விடுதலைக்கான ஆதரவு சக்திகளைத் திரட்டினார். வட்டாரத் தலைவர்களை, ராணுவ அணிகளை, விவசாயிகளை, பழங்குடிகளை, அடிமைகளை ஒன்றுபடுத்தினார். பலமுறை தோல்விகளைச் சந்தித்தார். பல வெற்றிகளையும் சாதித்தார்
தேசிய விடுதலை இயக்கங்களின் காலத்திலிருந்தே “அரசியலும் ஆயுதமும்” என்ற இணைப்பை பொலீவர் ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறார். “அரசியலும் போர்க்குணமும்” என்று கூட இந்த இணைப்பைக் குறிப்பிடலாம். சிலவேளைகளில் இந்த சேர்க்கை வன்முறையான அரசியலுக்கு இட்டுச் செல்கிறது என்பது உண்மைதான். நாட்டு விடுதலையைச் சாதித்த பிறகு, பல லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகள் பொலீவரின் பெயரால் ஆயுதம் தாங்கிய அரசியலை முன்னெடுத்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயின் போர்க்குணமற்ற அரசியல் பலவேளைகளில் மசணையானதொரு தேக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியலில் ஒரு போர்க்குணம் உருவானதற்கு சிமோன் பொலீவரைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். புரட்சிக்காரனுக்கு ஆயுதங்களைவிட போர்க்குணம் முக்கியமானது என்றார் பொலீவர். பொலீவரின் மொழியில் அரசியலில் போர்க்குணம் என்றால் என்ன? என்பதற்கு லத்தீன் அமெரிக்காவில் சேகுவாராவும் காஸ்ட்ரோவும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சிமோன் பொலீவர் தனது உன்னதமான தோழர்களைக் கண்டு கொண்டார்.
1808-1820 என்ற காலம் பொலீவரின் உக்கிரமான போராட்டக்காலமாக அமைந்தது. குறிப்பிட்ட அக்காலத்தில் வெனிசுவேலா, எகுவடோர், கொலும்பியா, பனாமா, பொலீவியா, பெரு ஆகிய பல நாடுகளில் ஆயுதமேந்திய எழுச்சிகளின் மூலம் அந்நாடுகளை ஸ்பானிய ஆட்சியிலிருந்து பொலீவரின் படைகள் விடுவித்தன. 1819 முதல் அவரது இறுதிக்காலம் (1830) வரையில் சிமோன் பொலீவர் விடுதலை அடைந்த அந்தக் குடியரசுகளின் அதிபதியாக விளங்கினார். வட அமெரிக்காவைப்போல ஒரு தென் அமெரிக்க ஐக்கிய நாடுகளை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் பொலீவருக்கு இருந்தது. அந்தக் கருத்தை அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். ஸ்பானியக் காலனி நாடுகள், ஸ்பானிய மொழி, ஸ்பானியர்-கறுப்பர்-செவ்விந்தியப் பழங்குடிகள் என்ற இணைப்பு போன்ற பல பொதுப்பண்புகளைக் கொண்டனவாக லத்தீன் அமெரிக்க ஐக்கிய நாடுகளை பொலீவர் உருவகித்தார். ஒரு மிகப்பெரும் லத்தீன் அமெரிக்கக் கனவாக இன்று வரையில் அது விளங்குகிறது. இந்த மாபெரும் கனவுக்காகவே லத்தீன் அமெரிக்கர்கள் சிமோன் பொலீவரைப் பெரிதும் நேசிக்கின்றனர். லத்தீன் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற கனவு மெய்ப்படவில்லை என்ற போதிலும், அந்தக் கனவுக்குப் பின்னாலுள்ள லத்தீன் அமெரிக்கரின் பொதுமைப் பண்புகள், அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு உணர்வு (Solidarity), போர்க்குணம் கொண்ட ஒருமைப்பாடு ஆகியவை மெய்யானவை என்பதை அவர்கள் உணர்கின்றனர். அவற்றைச் சுட்டிக்காட்டிய பொலீவரை அம்மக்கள் நேசிக்கின்றனர்.
பொலீவரின் ஐக்கியக் குடியரசுகள் என்ற கருத்தாக்கமும் தனித்தனியான தேசியக் குடியரசுகள் என்ற எதார்த்தமும் லத்தீன் அமெரிக்காவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்காவில் தனித்தனி தேசிய இனங்கள் என்பவை வலுவானவை அல்ல; நமது தேசிய உணர்வு நவீன காலத்தில் உருவானது; அது சுதந்திரம், சமத்துவம், தேசிய ஒற்றுமை போன்ற புதிய அரசியல் கருத்தாக்கங்களால் உருவானது என்று இந்த விவாதம் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆயின் ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகள் என்ற கருத்தும் பலமாக முன்வைக்கப்பட்டது. செவ்விந்தியப் பழங்குடிப் பண்புகள் கொண்ட தேசிய இனங்கள் என்ற புரிதல் உருவானது. பொலீவர் ஐக்கியக் குடியரசு என்ற ஏற்பாட்டை முன்வைத்த போதும் கலாச்சார தனித்தன்மைகள் பற்றிய விவாதம் மேலெழுந்தபோது அதனை ஒத்துக் கொண்டார். தனித்தனியான சுதந்திரக் குடியரசுகள் உருவாவதை ஏற்றுக்கொண்டார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலையைப் பொலீவர் மிக வித்தியாசமாகக் கட்டமைத்தார். பிரெஞ்சுப் புரட்சியின் லட்சியங்களை நெப்போலியன் விட்டுக் கொடுத்துவிட்டார் என்ற விமர்சனத்தைப் பொலீவர் அறிந்திருந்தார். நெப்போலியனை எதிர்காலம் விடுதலைப் போராளி என்று நினைவில் வைத்திருக்காது, பேரரசன் என்று வேண்டுமானால் நினைவில் வைத்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். “எனக்கு விடுதலைப் போராளி என்ற பெயர் மட்டும் போதும்! அதனைப் பேரரசன் என்ற பட்டத்தோடு நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை” என்று பொலீவர் அறிவித்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய சனநாயகப் புரட்சிகளை அவரில்லாமல் கருதமுடியாது.
விடுதலை என்ற லட்சியத்தைப் பொலீவர் எப்போதும் சமத்துவம் என்ற கருத்தாக்கத்தோடு இணைத்தே புரிந்துகொண்டார். சனநாயகம் என்பதை பெரும்பான்மை மக்களின் அதிகாரம் என்று அவர் வரையறுத்தார், ஆயின் அந்த அதிகாரத்தை ஒரு தனிமனிதன் எடுத்துக் கொள்ளும்போது அது சர்வாதிகாரமாக மாறிப்போய்விடும் என்றார். தென் அமெரிக்கச் சூழல்களில் வெள்ளையர், கறுப்பர், செவ்விந்தியர் என்ற மூன்று இனத்தவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்பது சாதிக்கப்படும்போதே நாட்டு விடுதலை என்பதும் சாத்தியமாகும் என்று பொலீவர் கூறினார். தேச விடுதலைக்கு முன்னால் அடிமை முறை ஒழிக்கப்படவேண்டும் என்றார். விடுதலை பெற்ற நாட்டில் அடிமைமுறை நிலவுகிறது என்பது பைத்தியக்காரத்தனம் என்று பொலீவர் எழுதினார்.
வெறுமனே ஸ்பெயின் நாட்டிடமிருந்து வெனிசுவேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதைப் பொலீவர் விடுதலை என்று கருதவில்லை. நாட்டு விடுதலை என்பதற்கான விரிந்த சமூகப் பரப்பினைப் பொலீவர் முன்மொழிந்தார். 1811 ல் வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஸ்பானிய ஆட்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்காவில் முக்கியப் பிரச்சினையாக நிலப் பகிர்வு விளங்கும் என்றார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடந்தகாலம் குறித்த பொற்காலச் சித்தரிப்புகளைப் பொலீவர் மறுதலித்தார். ‘நமக்கு ஒரு பழமையான வரலாறு இருக்கலாம். ஆனால் நமது கடந்த காலம் உத்தமமானதல்ல; தூய்மையானதும் அல்ல. இன அடிப்படையில் நாம் பல கொடுமைகளைச் செய்துள்ளோம். இன வேறுபாடுகளை நித்தியமானவை என நாம் நம்பி வந்திருக்கிறோம். நமது முன்னோர்கள் வேறு வேறானவர்களாக இருந்திருக்கலாம். இனங்கள், வரலாறு, பிறப்பு ஆகியவை இனி வேலை செய்யாது. நாம் ஒன்றுபட வேண்டும். நாம் ஒன்றுபடுவதற்காக நமது ரத்தங்கள் கலக்கட்டும்’, என்று பொலீவர் கூறினார். ஏராளமான சுயவிமர்சனங்களோடு ஒரு தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும், அப்போதுதான் அது முன்னோக்கி நகரமுடியும் என்று அவர் கூறினார். இதுவே பொலீவரின் தனித்துவம். அவரது சிந்தனைகள் பொலீவியரியம் என வழங்கப்படுகின்றன. சமீபகாலத்தில் பொலீவிய அதிபராக இருந்து மறைந்த ஹியூகோ சாவேஸ் தன்னைப் பொலீவரியவாதி என்று அறிவித்தார்.
பொலீவரை அவரது காலத்துக்கு முந்தியவர் என்பார்கள். அவரது நெருங்கிய நண்பர்களால் கூட அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் மிகக்கடினமானதொரு சமூக வரலாற்றுக் கடமையை ஆற்றினார். மிகக்குறைந்த காலமே வாழ்ந்தார், வெறும் 47 ஆண்டுகள். ஒடிசலான தேகம். போர் வாழ்க்கை. இறுதி ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டார். அவரது இறுதிக்காலம் குறித்து கப்ரியல் மார்க்யூஸ் ஒரு நாவல் எழுதியுள்ளார். “உலைக்களத்தில் ஒரு போர்த்தளபதி (A General in the Labyrinth, Gabriel Marcuse)” என்பது அந்நாவலின் பெயர். சிமோன் பொலீவரின் பிற்கால வாழ்வின் மனப்போராட்டங்களை அந்நாவல் சித்தரிக்கிறது. புரட்சிக்காரனின் தோல்விகள் புரட்சியின் முடிவைக் குறிப்பதில்லை, அதன் தொடர்ச்சியையே குறித்து நிற்கின்றன.
15.02.2017

About nmuthumohan

I worked in Madurai Kamaraj University, Tamilnadu, India and got retired in 2013. Presently on an assignment in Guru Nanak Dev University. I write on Philosophy, Religious Studies and Sikhism. Interested in Post Colonialism.
This entry was posted in English. Bookmark the permalink.

2 Responses to Simon Bolivar: Liberty and Equality (in Tamil)

  1. போர்க்குணமும் அரசியலும் இணைய தியாக மனோபாவமும் அவசியமில்லையா சார்?

Leave a comment